Friday, June 13, 2014

அல்லாஹ் எங்கே உள்ளான்?



அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையில் அல்லாஹ் எங்கே உள்ளான்? என்ற வினாவும், அதற்கான விடையும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இன்று அதிகமான முஸ்லிம்களிடம் அல்லாஹ்வைப் பற்றி தவறான நம்பிக்கைதான் நிலவுகின்றது. அத்வைதிகள், 'அல்லாஹ் எல்லாமாயும் எங்குமாயும் உள்ளான்' என்று கூறுகின்றனர், 'அவன் தூணிலும் துரும்பிலும் இருப்பதாக' நம்புகின்றனர். இன்னும் சில பிரிவினரும் 'அவன் எங்கிருந்தால் எங்களுக்கென்ன?' என்று கேள்வி கேட்டு இதில் அலட்சியப் போக்கைக் கடைபிடிக்கின்றனர்.
இவர்கள் அனைவரின் நம்பிக்கையும், திருக்குர்ஆனுக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் தெளிவாக முரணானவை என்பதை முதலில் நாம் கவனத்திற் கொள்வோம். அல்லாஹ் எங்கே உள்ளான்? என்ற வினாவுக்கு நாம் சரியான விடையை அறிந்து கொள்ள வேண்டுமாயின் திருக்குர்ஆனின் பாலும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் பாலும் திரும்ப வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் ஏழு வானங்களைக் கடந்துள்ள அர்ஷின் மீது உள்ளதாக திருமறைக் குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் அழுத்தமாகக் கூறுகின்றன. அதற்கான சான்றுகளை ஒவ்வொன்றாகக் காண்போம்.


அளவற்ற அருளான் அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (குர்'ஆன் 20:05)

அல்லாஹ் எங்கே உள்ளான்? என்ற வினாவுக்கு இந்த வசனம் தெளிவான பதிலாக அமைந்துள்ளது. இவ்வசனம் போன்று அல்குர்ஆனில் 7:54, 10:03, 13:02, 25:59, 32:04, 57:04 ஆகிய வசனங்களில் அல்லாஹ் அர்ஷின் மீது உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். அதிகமானோர் இந்த வசனங்களைக் கண்டு கொள்வதே இல்லை.


வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அப்போது அறிந்து கொள்வீர்கள். (குர்'ஆன் 67:16,17)

'வானத்தில் உள்ளவன்' என்று அல்லாஹ் இந்த வசனத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கூறுவது கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும். அத்வைதிகள் சொல்வது போன்று அல்லாஹ் எல்லாப் பொருளாகவும் இருந்திருந்தால் 'வானத்தில் உள்ளவன்' என்று அல்லாஹ் கூறியிருக்கமாட்டான்.


'ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்' என்று பிர்அவ்ன் கூறினான். இவ்வாறே பிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். பிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது. (குர்'ஆன் 40:36,37)

இவ்வசனத்தில் மூலம் மூஸா (அலைஹிசலாம்) அவர்கள், பிர்அவ்னுக்கு 'அல்லாஹ் மேலே உள்ளான்' என்று சொல்லியுள்ளார்கள். அதன் காரணமாகத்தான் பிர்அவ்ன்;, ஹாமானிடம் கோபுரத்தை எழுப்பச் சொல்கிறான். கோபுரம் எழும்பினால் அதன் மீதேறி 'மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும்' என்று பிர்அவ்ன் கூறுவதிலிருந்தே இறைத் தூதர் மூஸா (அலைஹிசலாம்) அவர்களும் அல்லாஹ் மேலே உள்ளதாகவே நம்பி அதனையே பிரச்சாரமும் செய்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.


தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர். (குர்'ஆன் 16:50)

அல்லாஹ் இவ்வசனத்தில் வானவர்களின் இறை அச்ச உணர்வைப் பற்றிச் சொல்கிறான். 'வானவர்கள் இறைவனை அஞ்சுவார்கள்' என்று சொல்ல வேண்டிய இடத்தில் அப்படிச் சொல்லாமல் 'தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அஞ்சுவார்கள்' என்று மேலதிக வார்த்தையைச் சேர்த்து அவன் சொல்லியிருப்பது இங்கு சிந்திக்கத்தக்கதாகும். அல்லாஹ்வைப் பொருத்தமட்டில் அவன் வீணாக எந்தவொரு வார்த்தையையும் பயன்படுத்தமாட்டான். இவ்வசனத்தில் 'மேலே இருக்கும் தமது இறைவனை வானவர்கள் அஞ்சுவார்கள்' என்று அல்லாஹ் சொல்வதிலிருந்து முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் நம்புவது போன்று அல்லாஹ் எல்லா இடங்களிலும் இல்லை மாறாக அவன் மேலே தான் இருக்கின்றான் என்பது சிந்திப்போருக்குப் புலப்படும் பேருண்மையாகும்.


முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்து வந்தாள். ஒரு நாள் நான் சென்று பார்த்த போது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்று விட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன். ஆயினும், அவளை நான் அறைந்து விட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் சென்ற போது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள். நான், 'அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள்!' என்று சொன்னார்கள். நான் அவளை அழைத்துச் சென்ற போது அவளிடம், 'அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?' என்று நபியவர்கள் கேட்டார்கள். அவள், 'வானத்தில்' என்று பதிலளித்தாள். அவர்கள், 'நான் யார்?' என்று கேட்டார்கள். அவள், 'நீங்கள் அல்லாஹ்வின் தூதர்' என்றாள். அவர்கள் (என்னிடம்), 'அவளை விடுதலை செய்து விடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்' என்றார்கள். (முஸ்லிம் 935)

அல்லாஹ் எங்கே இருக்கிறான்? என வினாத் தொடுப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது. சிலர் சொல்வது போன்று அல்லாஹ் எங்கே இருக்கிறான்? எனக் கேள்வி கேட்பது கூடாதென்றால் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அப்பெண்ணிடம் கேள்வி கேட்டிருக்கமாட்டார்கள். நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் வினாவிற்கு அப்பெண், 'அல்லாஹ் வானத்தில்' என்று பதில் சொன்னதும் நபியவர்கள் முஆவியாவை நோக்கி 'இவர் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண்' எனக் கூறி விடுவிக்கச் சொன்னதும், அல்லாஹ் மேலே இருக்கின்றான் என்று நம்புபவர் மாத்திரமே இறைவிசுவாசியென நாம் முடிவு செய்யப் போதுமான ஆதாரமாகும். இவ்வளவு தெளிவாக ஹதீஸ் இருந்தும் கூட சிலர் அல்லாஹ்வைப் பற்றி தவறான போதனைகளை மக்களுக்குப் போதித்து நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டுமென வாதிடுவோர் கூட அல்லாஹ் அர்ஷில் இருப்பதாக நம்புவதில்லை. அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் பின்வரும் செய்தி அமைந்துள்ளது.


ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹ) அவர்கள் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுடைய மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். உங்களை நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு, உங்கள் வீட்டார் மணமுடித்துத் தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழு வானங்களுக்கு மேலிருந்து நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு, மணமுடித்துக் கொடுத்தான் என்று சொல்வார்கள். (புஹாரி 7420)

ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹ) அவர்கள் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் துணைவியர்களில் ஒருவராவார். இவரை நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு அல்லாஹ்வே மணம் முடித்து வைத்தான். ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹ) அவர்களின் திருமணத்தைப் பொருத்தமட்டில் அதில் அவர்களது வீட்டார் சம்பந்தப்படுவதற்கு முன் அல்லாஹ்வே ஸைனபை, நபியவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக 33:37 வது இறை வசனத்தில் அறிவித்துள்ளான்.

இந்த அற்புத நிகழ்வு குறித்து ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹ) அவர்கள் கூறும் போது 'என்னை உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழு வானங்களுக்கு மேலிருந்து நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு, மணமுடித்துக் கொடுத்தான்' எனக் கூறுவார்கள். இச்செய்தியில் 'அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலிருந்து' என்ற வாசகம் எமக்கு உணர்த்தும் பாடமென்ன? இன்றைய முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் சொல்வது போன்று அல்லாஹ் எல்லா இடங்களிலுமில்லை, மாறாக அவன் ஏழு வானங்களைக் கடந்துள்ள அர்ஷில் தான் இருக்கிறான் எனும் பாடத்தை சிந்திப்போர் தெரிந்து கொள்வர். இவர்கள் ஹதீஸ்களை வைத்து ஒரு கொள்கையை வகுத்துக் கொள்ளாமல், கொள்கையை முன் கூட்டி வகுத்துக் கொண்டு பின்னர் ஹதீஸ்களைத் தேடி மனோ இச்சைக்கு ஏற்ப அவைகளை வளைத்து விளக்கம் சொல்லும் விசித்திரம் தான் இவர்களை நேர்வழியை விட்டுத் தூரமாக்கியது. இவர்கள், இஸ்லாமிய இறை நம்பிக்கையில் கூட தெளிவற்றவர்களாக திகழ்வதற்கும் அடிப்படைக் காரணம் இது தான் என்றால் மிகையில்லை!


மேற்குறித்த சான்றுகளிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் ஏழு வானங்களைக் கடந்துள்ள அர்ஷில்தான் இருக்கிறான் என தெளிவாகப் புரிந்திருப்பீர்கள்! தவறான வழிகாட்டல்களிலிருந்து நாம் விடுபட்டு தூய கொள்கையின் பால் அனைவரும் அணி திரள்வோமாக!

No comments:

Post a Comment